யமுனை நதி புண்ணியத்தை தேடி கொண்டது. கோதவரியோ களங்கத்தை தேடிக்கொண்டது. எப்படி என்கிறீர்களா?
"தூய பெருநீர் யமுனை துறைவனை" என்று பாடிய ஆண்டாள், கண்ணனுடைய அவதார காலத்தில் உபகாரம் பண்ணின யமுனை நதிக்கு நற்சான்றிதழ் தருகின்றார். என்ன உபகாரம்?
வசுதேவர் கண்ணனை தூக்கிக்கொண்டு நந்தகோகுலத்துக்கு போகையில், அவர் கேட்காமலேயே இடுப்பளவுக்கு வடித்து வழி விட்டது அந்த யமுனை நதி. புண்ணியத்தை, தூய்மையை தேடிக்கொண்டது.
ஆனால் கோதாவரி நதியோ களங்கத்தை தேடிக்கொண்டது. எப்படி? ஸ்ரீ ராமாவதாரத்தின்போது ராவணன் சீதாபிராட்டியை அபகரித்து போகிறான். அப்போது பிராட்டி கதறி அழுகிறார் "ஹே கோதாவரி, நீயும் பெண் நானும் பெண். எனக்கு நேரும் துன்பத்தை நீ இப்படி பார்த்துக்கொண்டு இருக்கியே, என் பர்த்தா வந்து என்னை தேடுவார். அப்போதாவது சொல்லு ராவணன் என்னை அபகரித்துப் போனான் என்று தவறாமல் சொல்லு".
ராமன் வந்து தேடியபோது "சீதையை கண்டீர்களா"? என்று மரம் மட்டையிடம் எல்லாம் கேட்டபோது கோதாவரி பதிலே சொல்லவில்லையாம். ஒரு அலை கூட அடிக்கலை. ராவணனிடம் இருந்த பயத்தினால் பேசாமல் இருந்து விட்டாள்.
உண்மை தெரிந்தவர்கள், உரிய சமயங்களிலே அதை சொல்ல வேண்டும் - வெளிபடுத்த வேண்டும். அப்படியில்லாமல் "நமக்கு அதில் நேரடி சம்பந்தமில்லைன்னு" வாய் பொத்தி இருந்துட்டா களங்கம் வந்துடும். அப்பேர்ப்பட்ட களங்கம்தான் கோதாவரிக்கு ஏற்பட்டது.
திரேதா யுகத்திலே கோதாவரிக்கு ஏற்பட்ட இந்த களங்கம் கலியுகத்திலே தீர்ந்து போயிற்று... எப்போது தீர்ந்தது என்று கேட்டால் ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள் பிறந்தப்போ, பெரியாழ்வார் அந்தக் குழந்தைக்கு "கோதா" (கோதை) என்று பெயர் வைத்தாரே ... அப்போது தீர்ந்தது கோதாவரியின் களங்கம்.
Comments